சென்னையில் ஒரே இரவில், சுமார் 270 மிமீ கொட்டிய மழை சாமானிய மக்களை நடுங்க வைத்துவிட்டது. வீட்டிற்குள் புகுந்த மழை நீரால் இரவு தூக்கம் தொலைந்து போனது. இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போனது. அதி கன மழைக்கு காரணம் என்ன? வானிலை மையம் கவனிக்க தவறியதா? கணிக்க தவறியதா? என்ற கேள்வி எழுகிறது. சனிக்கிழமை இரவு சென்னையின் சில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மணலியில் 270 மிமீ, புதிய மணலி டவுனில் 260 மிமீ, விம்கோ நகரில் 230 மிமீ மழை பதிவானது. சராசரியாக 200 மிமீக்கும் மேலாக வானத்தை கிழித்துக் கொண்டு கொட்டித்தீர்த்தது, கனமழை. பாவம், சாமானியர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு என்ன காரணம், மேக வெடிப்பா?ஒரு மணி நேரத்தில், சுமார் 20 - 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 100 மிமீ மழை பெய்தால் அதை மேக வெடிப்பு என்கிறார்கள். சென்னை மணலியிலும் மேகவெடிப்பு காரணமாக, 271.5 மிமீ மழை கொட்டி தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.முதல் நாள் கன மழை பெய்தது, இரண்டாம் நாளிலும் கன மழை தொடர்ந்தது. ஏன் எச்சரிக்கவில்லை வானிலை மையம், கணிக்க தவறியதா, கணிக்க முடியவில்லையா? வானிலை ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்? திடீர் கன மழைக்கு என்ன காரணம்?மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு அல்லது மேக வெடிப்பு இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த வானிலை நிகழ்வானது, வளிமண்டலத்தில் நீர் ஆவியாவதற்கும், மேகங்கள் உருவாகி கனமழையாகப் பொழிவதற்கும் காரணமாக இருக்கின்றன. வளிமண்டலத்தில் அதிகப்படியான நீர் ஆவியாகி, திடீரென பெரும் மழையாகப் பொழிவதையும் குறிக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு (Westward Wind Speed Variation) என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் வானிலை ஆர்வலர்கள். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடும் கனமழைக்கு வழிவகுக்கும். இது, தமிழகப் பகுதிகளுக்கு ஈரப்பதத்தை கொண்டு வந்து, மழை மேகங்களை உருவாக்கி கனமழையாகப் பொழிய வைக்கிறது. இதனைத் தவிர, இரவு நேரங்களில், வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், தரை மற்றும் கடற்பரப்பில் இருந்து வரும் ஈரப்பதம், அத்துடன் தரை மற்றும் கடலில் வெப்பச்சலனம் ஏற்படும் நிலை ஆகியவை இரவில் கனமழைக்கு காரணமாக அமையும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். வெப்பக் காற்றும், குளிர் காற்றும் இணையும் போது, அதிக ஈரப்பதம் மேகங்களில் சேரும் போது, கன மழையாக கொட்டவும் வாய்ப்பிருக்கிறது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், மேகவெடிப்புகள் மலைப் பிரதேசங்களில் தான் அதிகளவில் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். நிலப்பரப்புகள் நிறைந்த தமிழகத்தில் இதுபோன்ற மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், கடலோர பகுதிகளில் மேக வெடிப்புக்கு வாய்ப்புண்டு. இதுவும் அரிதான ஒன்று தான். தெற்கு ஆந்திராவில் இருந்து வட தமிழகம் வரை இடி, மின்னல் உருவாக கூடிய ஒரு கட்டமைப்பு இயற்கையாகவே இருக்கிறது. இதுவும் கன மழைக்கு காரணம் என்று, வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் மேக வெடிப்பால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்றாலும், அதி கன மழைக்கு பிறகு, காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து கூறினாலும், மக்களுக்கு ’பக் பக்’ என்று தான் இருக்கும்.இது பருவ மழைக்காலம். மக்களுக்கு கவனம் தேவை...