திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், 150 ஆண்டுகால அரச மரம் வேருடன் சாய்ந்து மின்கம்பங்கள், ஈச்சர் லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சேதமடைந்தன. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பல பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட தர்ஜித்பேட்டை பகுதியில் 150 ஆண்டு பழமையான அரச மரம் வேருடன் சாய்ந்து, அசோக் என்பவரது வீடு, அவரது ஈச்சர் லாரி, இருசக்கர வாகனம், நகராட்சிக்கு சொந்தமான சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்தது. நகராட்சி பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.