தமிழகத்தில் 8, 9ஆம் தேதிகளில், சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை:வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று 4ஆம் தேதி காலை 5.30க்கு, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வருகிற 8ஆம் தேதி, தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 9ஆம் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மற்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.