சென்னையில் திடீர் திடீரென வானிலை மாறி, விட்டு விட்டு கனமழை கொட்டியது. இதனால், புதுப்பேட்டையில் உள்ள சாலைகள் குளமாக மாறி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொது மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிப்பட்டனர்.போரூர்: கனமழை காரணமாக, சென்னை அடுத்த போரூர் மேம்பாலத்தின் கீழ் குளம்போல மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். மாநகராட்சி சார்பில் மின் மோட்டர் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் துரித கதியில் நடைபெற்றன. கார், ஆட்டோ, பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடியே ஊர்ந்து சென்றன.திருவள்ளூர்: சென்னை புறநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கன மழையால், பூந்தமல்லி நுழைவாயிலான மேம்பாலம் பகுதி நீச்சல் குளமாக காட்சியளித்தது. 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.