சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். நாகராஜன் நகர், பிரபாகரன் காலனி உள்ளிட்ட பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து, மழைநீரோடு கழிவுநீரும் கலந்ததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். மேலும், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, அப்பகுதியே சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தெரு முழுவதும் தண்ணீர் சூழ்ந்து விளையாட முடியாததால் விடுமுறை விட்டும் பலனில்லை என சிறுவர்கள் புலம்பினர்.