வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. பேரணாம்பட்டு நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். நகர்மன்ற துணைத் தலைவர் ஜுபேர் மற்றும் 9வது வார்டு கவுன்சிலர் சுல்தான் ஆகியோர், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் கொட்டும் மழையிலும் வீடு வீடாக சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர். கொட்டாற்றங்கரையோர மக்களுக்கு மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மசூதிகளில் தங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.