வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.ராமேஸ்வரத்தில் வேர்க்கோடு, திட்டக்குடி, மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், திடீரென கனமழை பெய்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததுடன், நுழைவு வாயில் முன்பும் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி சென்றனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் நோயாளிகளும் பொதுமக்களும் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் அருகே வேதாளை பகுதியில் முழங்கால் அளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாத நிலை உள்ளது.மண்டபம் அருகே கலைஞர் நகர் பகுதியை சூழ்ந்த மழைநீர் இடுப்பளவு தேங்கியதால், குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மழைநீரில் மூழ்கிய நிலையில், சேறும் சகதியுமாக உள்ள மழைநீரில் விஷ ஜந்துகள் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.