வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் கழிவுநீரும் கலந்திருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தூத்துக்குடியில், வெளுத்து வாங்கிய கனமழையால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குழந்தைகள் வார்டு, ரத்த வங்கி உள்ளிட்ட வார்டுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ள நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மருத்துவமனை ஊழியர்களும் மழைநீரில் நடந்து சென்றவாறே பணிகளை மேற்கொண்ட நிலையில், ஆம்புலன்ஸ்கள் பின்பாதை வழியாக சென்று வந்தன. தூத்துக்குடி மாவட்டம், ஆதிபராசக்தி நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்த நிலையில் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறிய கழிவுநீர் மழைநீருடன் கலந்த நிலையில், பச்சை நிற பாசியும் படிந்துள்ளதால் மக்கள் சிரமப்பட்டனர். தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக ரஹமத் நகர், முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர். குறிஞ்சி நகர், தனசேகர் நகர், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளை மழைநீர் சூழ்ந்த நிலையில், மாநகராட்சியும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர். மழை பெய்தாலே விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகுவதாக கூறிய குடியிருப்புவாசிகள், பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில், ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடிக்கும் வகையில் நீர் ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. ஆகையால் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், அந்த வளாகத்தில் உள்ள குடியிருப்புகளும் மழைநீரில் தத்தளித்தன. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையும் பாருங்கள் - Paddy Damage | வெள்ளத்தில் மிதக்கும் நெற்பயிர்கள்... தொடர் மழையால் கலக்கத்தில் விவசாயிகள்