முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உயர் நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை அனுமதி அளித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்புக்கு, அவர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆளுநரின் நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்ததோடு, மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது.