குவாரிகளில் இருந்து, சாம்பலை ஏற்றிச் செல்லும் லாரிகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிப்புத்தூர் பகுதியில் சாம்பல் கழிவுகள் மற்றும் குவாரியில் இருந்து மண் ஏற்றி செல்லும் லாரிகளால், சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி, லாரிகளை சிறை பிடித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி நேரங்களில், அதிக பாரத்துடன் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், விபத்து நேரிடும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தார்ப்பாய் போடாமல் செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.