கொடைக்கானலில், குவிந்த சுற்றுலா பயணிகளால், தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது பண்டிகைகால தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, முக்கிய நகர்ப் பகுதியான நாயுடு புரம், கான்வென்ட் ரோடு, ஏரி சாலை, பேருந்து நிலையம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது . இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, முக்கியமான பிரதான சாலைகளில் கூடுதலான காவலர்களை பணியில் அமர்த்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.