வெற்றி பயணத்தால், மன நிறைவுடன் தாயகம் திரும்பியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்தார். ஜெர்மனி, இங்கிலாந்து நிறுவனங்களுடன் 33 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மொத்தமாக 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:ஒரு வார காலமாக ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தை மேற்கொண்டேன். மன நிறைவோடு திரும்பியுள்ளேன். இந்தப் பயணத்தை பொறுத்தவரையில் மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. மொத்தமாக 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு போகாமல், நம் மாநிலத்திலேயே விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளன. ஒரு துடிப்பான அமைச்சர் என்று, டி.ஆர்.பி.ராஜா இந்த பயணத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.அயலக தமிழர்கள் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பேசியது, காரல் மார்க்ஸ் நினைவிடம், அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, பெருமையுடன் திரும்பியுள்ளேன்.இதை, சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதற்கு இந்த வெளிநாட்டு பயணம், இங்கு இருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்றெல்லாம், அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்து, புலம்பி உள்ளனர். அவர்களுக்கு, நான் சொல்வது என்னவென்றால், ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் நிறைய ஜெர்மன் நிறுவனங்கள் வந்திருந்தன. அப்போது, தமிழகத்தைப் பற்றி எடுத்துச் சொன்ன போது, தமிழகத்தில் இவ்வளவு வசதி உள்ளது இப்போது தான் தெரிகிறது என்று கூறினார்கள். இனி, தமிழகத்தை நோக்கி நிறைய நிறுவனங்கள் வரும் என்றும் சொன்னார்கள்.வெளிநாட்டு தலைவர்களுடன் வலுவான உறவை உருவாக்கவும், இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நானே வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஏற்கனவே தமிழகத்தில் நிறுவனங்கள் இருந்தாலும், புதிய திட்டங்களை இங்கே தான் தொடங்க வேண்டும் என்று அந்நிறுவனங்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் பற்றி முதல்வராக இருக்கும் நானே அவர்களிடம் எடுத்துக் கூறினேன். வரும் 11ஆம் தேதி ஒசூர் செல்கிறேன். அங்கு 2,000 கோடி ரூபாய் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, பணியாளர்கள் தங்கும் இடத்தை திறந்து வைக்க உள்ளேன். அதன்பிறகு, 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப் போகிறேன். ஏற்கனவே, தூத்துக்குடியில் நடத்தியதைப் போல ஒசூரிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தப் போகிறோம். அங்கும் பல ஆயிரம் கோடி முதலீடுகள் வர இருக்கிறது.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதையும் பாருங்கள்: CM Stalin returns | பொறுக்க முடியவில்லை.. புலம்புகிறார்கள்.. முதலமைச்சர் பேச்சு | Germany VisitCM Stalin returns | இபிஎஸ் விமர்சனத்திற்கு முதலமைச்சர் பதிலடி | CM Replies to Edappadi Palaniswami