திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களும், பேராசிரியர்களும் வகுப்புகளை புறக்கணித்து பழைய ஷிப்ட்டு முறையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் எல்லையில் அமைந்துள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கடந்த ஆண்டு காலை மற்றும் மாலை என இரண்டு ஷிப்ட்டுகளாக கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த 2024 கல்வியாண்டில் இருந்து காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே ஷிப்டாக கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுன் மாதம் 19,21,28 மற்றும் ஜுலை 15 ஆகிய தேதிகளில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் வழக்கமாக கல்லூரிக்கு சென்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி பழைய ஷிப்ட் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரி வளாகத்தின் உள்ளே வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து மாணவர்களும், பேராசிரியர்களும் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.