செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் குப்பை கழிவுகளை கிளியாற்றில் கொட்டி எரிப்பதால் காற்று மாசடையும் அபாயம் ஏற்படுமென புகார் எழுந்துள்ளது. பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை ஊழியர்கள் அதற்காக அமைக்கப்பட்ட வளம் மீட்பு பூங்காவில் கொட்டாமல், கிளியாற்றில் கொட்டி எரிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் காணப்படுவதாகவும், அவ்வழியே வாகனங்களில் செல்வோர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. எனவே காற்று மாசுபாட்டை தவிர்க்க கிளியாற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.