திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் அப்பாவியாக பயணம் செய்து கொண்டிருந்த வட மாநில இளைஞரிடம் வம்பிழுத்து, பட்டாக்கத்தியை வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய பயங்கர சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. கஞ்சா போதை தலைக்கேறி, இளைஞரை, ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டிய மைனர் புள்ளிங்கோக்களை போலீஸ் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலைய காம்பவுண்டு சுவருக்கு அருகே இளைஞர் ஒருவர், கை, கால், தலையில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெட்டுப்பட்டு கிடந்த இளைஞரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு போராடும் நிலையில் துடித்துக் கொண்டிருந்த இளைஞரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸ், என்ன நடந்தது என விசாரணை நடத்தினர்.விசாரணையில் வெட்டுப்பட்டு கிடந்த இளைஞர், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த 34 வயதான சுராஜ் என்பது தெரியவந்தது. சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற புறநகர் ரயிலில் பயணம் செய்து வந்த சுராஜை, 4 பேர் சேர்ந்து பட்டாக்கத்தியால் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திருத்தணி சென்ற ரயிலில் அமைதியாக வாசல் ஓரத்தில் அமர்ந்து சுராஜ் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திருவலாங்காடு என்ற இடத்தில் ரயிலில் ஏறிய 17 வயது ராட்சசன்கள் நான்கு பேர், பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் போட்டதாக கூறப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் பயணிக்கும் ரயிலில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ போட்ட அந்த இளசுகள், அமைதியாக இருந்த சுராஜை வம்புக்கு இழுத்ததாக சொல்லப்படுகிறது. கத்தியை சுராஜ் முன்பு காட்டி காட்டி ரீல்ஸ் வீடியோ போட்ட அந்த இளசுகளுக்கும், சுராஜுக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. ரீல்ஸ் எடுக்க வேண்டாம் என சுராஜ் கூறியது, நான்கு போதை சிறார்களுக்கும் கோபத்தை கொடுத்திருக்கிறது.இதனால், திருத்தணி வந்ததும் ரயிலை விட்டு இறங்கிய சுராஜை பின் தொடர்ந்து சென்ற நான்கு பேரும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கேலி, கிண்டல் செய்து வம்பிழுத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கஞ்சா போதை வெறி பிடித்து அந்த வட மாநில இளைஞரை குத்துயுயிரும், கொலை உயிருமாக வெட்டியிருக்கிறார்கள். ரத்தம் சொட்ட சொட்ட வட மாநில இளைஞர் துடித்து அலற, கஞ்சா போதையில் எதுவுமே தெரியாமல் இன்னும் வெறி பிடித்தது போல மாறி மாறி வெட்டி வீடியோ எடுத்து வேற ரசித்தது கொடூரமாக இருந்தது.இதனையடுத்து, கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீஸ் கைது செய்து, கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர். படிக்கிற வயதில் கஞ்சா போதைக்கு அடிமையாகி அரிவாளும், கத்தியுமாகபொது இடத்திலேயே வைத்து வெட்டி கெத்து காட்டும் அளவுக்கு அந்த சிறார்கள் சீர்கெட்டு போயிருந்தது, சமூகம் எதை நோக்கி செல்கிறது என்ற வேதனையை தான் ஏற்படுத்தியது.