நீலகிரி மாவட்டம், உதகை சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி சீசன் தொடங்கிவிட்ட நிலையில், நிலங்களில் பனித்துகள்களை போர்த்தியதை போன்ற ரம்மியாக காட்சியளித்தது. உதகையில் கடும் பனிபொழிவு நிலவும் நிலையில், புல்வெளிகளிலும், வாகனங்களிலும் பனித் துகள்கள் படர்ந்தன. நீர் நிலைகளில், பனிமூட்டம் சூழ்ந்தது ரம்மியமாக காட்சியளித்தது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும், உதகையில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிப்படியாக உறைபனி பொழிவு காணப்படும். தற்போது பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது.