தமிழக அரசு, மூத்த குடிமக்களுக்கு இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில், முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இருந்து 200 முதியோர், அறுபடை வீடுகளுக்கும் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஆறு பேருந்துகளில் புறப்பட்டனர். இந்து சமய அற நிலையத்துறை மூலமாக 60-70 வயதுடைய மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதன்படி தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 நபர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா செய்ய பதிவு செய்திருந்தனர். இவர்களை, இன்று கும்பகோணம் அருகே உள்ள அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்தபின் 6 சுற்றுலா வளர்ச்சிக் கழக ஏசி சொகுசு பேருந்துகளில் மற்ற ஐந்து முருகப்பெருமானின் கோயில்களுக்கு புறப்பட்டு சென்றனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் பேருந்து பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.