கடந்த 2 வருடங்களாக, குடிநீர் முறையாக வரவில்லை எனக்கூறி, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி பகுதியில் உள்ள புது காலனியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக குடிநீர் சரிவர வராததால், பலமுறை தேனோடு பஞ்சாயத்து அலுவலகத்தில், பொது மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு புது காலனி பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். அப்போது, காவல் துறையினர் திடீரென அனுமதி இல்லையென கூறவே, சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையில், பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், பொது மக்கள் கலைந்து சென்றனர்.