சென்னை, வேளச்சேரி HDFC வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, ஃபர்தா அணிந்து வந்த ஒரு பெண், விட்டுவிட்டு சென்ற நிலையில், அந்த வங்கியில் ஏற்கனவே மேனேஜராக பணிபுரிந்து வந்த பெண் தான் நகைளை நாசூக்காக விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்த அந்த பெண் எதற்காக ஃபர்தா அணிந்து வங்கிக்கு வந்தார்? ஒன்றே கால் கிலோ தங்கத்தை அனாமத்தாக விட்டுச்செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. மில்லி கிராம் அளவில், தங்கம் தொலைந்தாலே சல்லி சல்லியாய் மனம் உடையும் அளவுக்கு தாறுமாறாக தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், கிலோ கணக்கில் தங்கத்தை வங்கியில் ஒரு பெண் போட்டுவிட்டு சென்றுள்ளது, தலையாரி வீட்டில் திருடன் ஒளிந்ததுபோன்று உள்ளது என்பதே பலரது கருத்து.சென்னை, வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ளது HDFC தனியார் வங்கி. இந்த வங்கிக்கு கடந்த 5ஆம் தேதி பர்தா அணிந்தபடி வந்த ஒரு பெண், தன்னை சர்மிளா பானு எனவும் தனது கணவர் பெயர் அப்துல் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், தனது கணவருக்கு இந்த வங்கியில் கணக்கு உள்ளதாகவும், தனக்கும் உங்கள் வங்கியிலேயே கணக்கு தொடங்க வேண்டும் எனவும் கூறிய அந்த பெண் நகைகளை லாக்கரில் வைக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இதையடுத்து, வெளியில் சென்றிருந்த ரிலேஷன்ஷிப் மேனேஜர் வரும்வரை 15 நிமிடங்கள் காத்திருந்த அந்த பெண், மேனேஜர் வந்ததும் வங்கி கணக்கு தொடங்குவது குறித்தும், நகைகளை லாக்கரில் வைப்பது குறித்தும் பேசி உள்ளார். அப்போது, உரிய ஆவணங்கள் தேவை என, மேனேஜர் கூறியதும் அங்கிருந்து கிளம்பிவிட்டார் அந்த பெண்.இதையடுத்து, பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் கண்ணில் பை ஒன்று தென்பட்டுள்ளது. அந்த பையில் ஒரு ஆரம், 2 வளையல் என 250 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ தங்க பிஸ்கட் இருந்ததை பார்த்த ஊழியர்கள் அது யாருடையது? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.அதில், பர்தா அணிந்து வந்த பெண் தான் பையை விட்டுச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. பொட்டு தங்கம் காணாமல் போனாலே சிட்டாய் பறந்துவரும் மக்கள் மத்தியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள அந்த தங்கத்தை உரிமைகோர 5 நாட்களாகியும் சம்மந்தப்பட்ட அந்த பெண்ணோ அல்லது அவரது உறவினர்களோ யாரும் வருவதுபோல் தெரியவில்லை.இதையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வங்கி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பையை விட்டுச்சென்ற பெண் பர்தா அணிந்திருந்ததால் அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கே சிக்கல் ஏற்பட்டது. அதனால், அந்த பெண் வங்கிக்கு வந்த பாதையில் இருந்து கடைசியாக அந்த பெண் சென்ற இடம்வரை உள்ள அத்தனை பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்தனர்.அந்த சிசிடிவி கேமராக்கள் கடைசியாக காட்டிய பாயிண்ட் தான் வேளச்சரி ராம் நகர் 2ஆவது தெருவில் உள்ள கிருஷ்ணாலயம் லேடீஸ் ஹாஸ்டல்.அடுத்து அந்த ஹாஸ்டலில் இருந்த பெண்களின் பட்டியலை சேகரித்த போலீசார் அவர்கள் எங்கு பணிபுரிகிறார்கள்? எத்தனை ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள்? அவர்களின் சொந்த ஊர் எது? என விசாரணையை முன்னெடுத்தனர்.. அப்போது தான் பெரிய ட்விஸ்ட்டே காத்திருந்தது.வேளச்சேரி HDFC வங்கியில் ஒரு ஆண்டு மேனேஜராக பணியாற்றிய பத்மபிரியா என்ற பெண் தான் நகையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில்தான் பத்மபிரியாவின் திருட்டு பிளாஷ்பேக் அத்தனையும் வெளியில் வந்தது.பத்மப்பிரியாவின் கணவர் சீனிவாசன் கோடிக்கணக்கில் பணம் வாங்கி பிசினஸ் செய்துள்ளார். அந்த பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் பத்மபிரியாவை நச்சரிக்க, அவர் தான் பணிபுரிந்த வங்கி லாக்கரில் கை வைத்துள்ளார். லாக்கர் எண் 196ல் இருந்த 243.03 கிராம் நகைகளை திருடினார் பத்மபிரியா. இந்நிலையில் நகையின் உரிமையாளர் நகைகளை வாங்குவதற்காக வங்கிக்கு வந்தபோது பத்மபிரியாவின் திருட்டுவேலை அம்பலமானது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட பத்மபிரியா, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.லாக்கர் எண் 196ல் இருந்த நகைகளை திருடியதுபோன்றே லாக்கர் எண் 25ல் இருந்த நகைகளையும் திருடி இருந்தார் பத்மபிரியா. ஆனால், அந்த விவகாரம் வெளியில் வரவில்லை. அதுவும் வெளியில் வந்தால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிவருமே என்ற அச்சம் பத்மபிரியாவிற்கு ஏற்பட்டுள்ளது. தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்த பத்மபிரியா, எடுத்த இடத்திலேயே நகையை வைத்துவிட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழிதான் பர்தா ஆபரேஷன். பர்தா ஒன்றை விலைக்கு வாங்கிய பத்மபிரியா, லாக்கர் எண் 25ல் இருந்த குணவதி என்ற வங்கி கணக்குதாரரின் நகைகளை ஒரு பையில் போட்டு HDFC வங்கிக்கு கொண்டு சென்றதோடு, நேக்காக அந்த பையை வைத்துவிட்டு தான் தங்கி இருந்த ஹாஸ்டலுக்கு வந்துவிட்டார்.பத்மபிரியாவின் கணக்குப்படி பர்தா அவரை பாதுகாப்பாக ஹாஸ்டலுக்குள் செல்ல வழிவகை செய்துவிட்டது. ஆனால், மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராக்கள் ஃபர்தாவையும் தாண்டி பத்மாபிரியாவையும் பக்குவமாக சிக்க வைத்துவிட்டது. கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிடும் என தப்புக்கணக்குப்போட்ட பத்மபிரியா மீண்டும் சிறைக்கு சென்றுவிட்டார்.