சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மேகக்கூட்டம் தரையை போர்த்தியது போல் கடும் பனிமூட்டம் நிலவியதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். அதே சமயம் சாலை தெளிவாக தெரியாததால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றனர். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஏற்காட்டில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. ஏரி பகுதியில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.