செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழியாக செல்லும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவ்வாது மலைத்தொடரில் பரவலாக கனமழை பெய்ததின் காரணமாக, செண்பக தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை திறந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, ஆரணி பகுதி வழியாக வரும் கமண்டல நாக நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. வாழைபந்தல் பகுதியில் கமண்டல நாகநதி செய்யாற்றில், இந்த வெள்ளம் கலக்கிறது. இதன் காரணமாக, செய்யாற்றில் பரவலாக வெள்ளம் கரை புரண்டு செல்கிறது. இதனால் செய்யாற்றில் இருந்து துணைக் கால்வாய்கள் மூலமாக ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதால், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.