தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறந்து விடப்பட்டதாலும் குச்சனூர் கூலையனுர் பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைகளை உடைத்து கொண்டு கட்டுக்கடங்காத வெள்ளம் வயல்வெளிக்குள் சீறிப் பாய்ந்ததால் 5000 வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன. அறுவடைக்கு காத்திருந்த சுமார் 30 ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் முற்றிலும் வெள்ளப்பெருக்கில் மூழ்கி நாசமாகி உள்ளது. ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தால், மயான எரியூட்டு மையம் நீரில் மூழ்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெள்ள பெருக்கால் கரைகளில் உடைப்பெடுத்து மேலும் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குச்சனூர் கூலையனுர் பாலர் பட்டி சுற்றுப்பகுதிகளில் முல்லைப் பெரியாறு கரையோரம் உள்ள சுமார் 500 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். "இந்த முறை எங்களுக்கு தீபாவளி இல்லை" என்று விவசாயிகள் கண்ணீர் வடித்துள்ளனர்.