திருப்பூர் அருகே மங்கலம் நல்லம்மன் கோயில் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில், நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தடுப்பணை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த தடுப்பணையில் தடுக்கப்படும் தண்ணீர், ராஜ வாய்க்கால் மூலமாக, ஆண்டிபாளையம் குளத்துக்கும், நொய்யல் வழியாகவும் செல்கிறது. இந்நிலையில், கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நல்லம்மன் கோயில் தடுப்பணையை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நுரை பொங்க ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர் அருவி போல் கொட்டியது. அணை நிரம்பி தண்ணீர் பரவலாக வெளியேறியதால், நல்லம்மன் கோயிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தடுப்பணை அருகில் ஆபத்தை உணராமல் ஏராளமான இளைஞர்கள் மீன் பிடித்து வருகின்றனர். பொதுப் பணித் துறையினர் உடனடியாக இந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், காவல் துறையினர் இப்பகுதிக்கு ரோந்து சென்று ஆய்வு செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.