கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் வெள்ளத்தில் சிக்கியது. தமிழகம் மற்றும் கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டத்திலும் கன மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட கோதமங்கலம் பகுதியில் அமைந்துள்ள முல்லரிங்காடு வனப்பகுதியில் அதிகளவில் கன மழை பெய்ததால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, குடமுண்டா பாலம் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென வெள்ளம் ஏற்பட்டதால், கார்கள் வெள்ளத்தில் சிக்கின. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரின் உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். பெய்து வரும் இந்த மழையின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மலையோரம், ஆற்றின் கரையோரமாக இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.