மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அருகில் அமைந்துள்ள இத்திருக்கோயில் தெப்பக்குளம் 1000 அடி நீளம் 950 அடி அகலம் 16 அடி ஆழம் கொண்ட பெரிய தெப்பக்குளமாகும். மன்னர் திருமலைநாயக்கர் தனது அரண்மனை கட்டுமானத்திற்கு தேவைப்பட்ட செங்கல்களை தயாரிப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தினை தெப்பக்குளமாக அமைத்துள்ளார். 1645 ஆம் ஆண்டில் இக்குளத்தினை தெப்பக்குளமாக மாற்றி சுற்றிலும் கருங்கற்களினால் தடுப்புச் சுவர் கட்டி, ஒவ்வொரு திசையிலும் மூன்று படித்துறைகளாக மொத்தம் 12 படித்துறைகள் அமைத்து, மையத்தில் 200 அடிக்கு 200 அடி என்ற அளவில் மைய மண்டபம் ஒன்று அமைத்து அம்மைய மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் சிறிய கோபுரம் அமைத்து, அதன் மையத்தில் அழகிய வேலைபாடுகளுடன் கொண்ட ஐந்து நிலை கோபுரம் என தெப்பக்குளத்தின் வெளி அழகினைக் காண மாடங்களுடன் கூடிய கோபுரம் கட்டியுள்ளார். மதுரை நகர் வைகை ஆற்றில் இருந்து, பனையூர் வாய்க்கால் மற்றும் சொட்டதட்டி வாய்க்கால்கள் மூலம் இத்தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்துக்கானப் பாரம்பரிய வாய்க்கால்கள் உள்ளன. தெப்பக்குளத்தின் தென்மேற்கில் இரண்டு கண்கள் மற்றும் வடமேற்கில் இரண்டு கண்கள் மூலம் தண்ணீர் உள்ளே வரும் வகையிலும், தெப்பம் நிறைந்து கிழக்கு பக்கம் உள்ள வழி மூலம் தண்ணீர் வெளியேறும்படி கட்டப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக வாய்க்கால்கள் அடைப்பட்டு, தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வராமல் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பனையூர் பாசன கால்வாய் மூலம் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தமிழர்களின் நீர் நிர்வாகத்தின் பெருமையைப் பறை சாற்றும் வகையில், அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் 16 கால்மண்டபம் அருகிலும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள, வண்டல் மண் தேங்கும் (Sedimentation Well) இரண்டு கிணறுகள் மூலம் ஆற்று நீரில் வருகின்ற வண்டல் மண் வடிகட்டப்பட்டு, தெளிந்த நீராக,இரண்டு முதலைவாய்த் தூம்புகள் (Crocodial mouth Inlet) மற்றும் இரண்டு பூத வாயில்கள் வழியாக தெப்பக்குளத்திற்கு நீர் கொண்டு வரப்பெற்று, தெப்பக்குளம் முழுவதும் நீர் நிரப்பப்பட்டுள்ளது. வருடந்தோறும் தை மாதத்தில் தைப்பூசத்தெப்பத் திருவிழா நடைபெறும். திருமலைநாயக்கர் மன்னரால் மண்டகப்படி ஏற்படுத்தப்பட்டு இன்று வரை அது அரசு மண்டகப்படியாக நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தினத்தில் அம்பாள், சுவாமி இத்தெப்பக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி காலை இரு முறையும் மாலை ஒரு முறையும் தெப்பத்தை சுற்றி வருவர்.இத்திருவிழாவினை காண ஒரு இலட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கூடுவார்கள். திருவிழா தினத்தன்று மாலையில் அம்பாள், சுவாமி மைய மண்டபத்தில் எழுந்தருளி மைய மண்டபத்தில் உள்ள மன்னர் திருமலைநாயக்கர் பரிவட்டம் சுட்டி மண்டகப்படி நடைபெறும். தெப்பத்திருவிழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி விவரப்படி, 21.01.2026 முதல் 01.02.2026 முடிய நடைபெறவுள்ளது. மேற்படி நாட்களில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன், இருவேளைகளிலும், நான்கு சித்திரை வீதிகளிலும், மேலும் உற்சவ பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி புறப்பாடாகி திருவீதி உலா வருவர். இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் 01.02.2026 அதிகாலையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான, அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து, மேற்படி தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்தும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பத்தி உலாத்திதீபாராதனை நடைபெற்று, மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும். மேலும், 01.02.2026 அன்று அதிகாலையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து, அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று, இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை அன்றைய தினம் திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். மேற்படி நாளில் பக்தர்கள் நலன் கருதியும், வெளியூர்களிலிருந்து வருபவர்களின் நலன் கருதியும் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும் உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 07.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இத்திருக்கோயில் அறங்காவலர்கள், இணைஆணையர்/செயல்அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : கிராமத்திற்குள் புகுந்து இளைஞர்களை வெட்டிய கும்பல்