ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த செந்தில்குமார், காளிதாஸ், தங்கம், பாஸ்கரன் மற்றும் ஜே.எம்.சி.ஜாய்சன் ஆகியோர் இளைஞர்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சங்களை பெற்றுக்கொண்டு, அனுமதிச் சீட்டு, உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்தனர். இந்த புகாரில் 5 பேர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாவட்ட நீதிமன்றம் போதிய ஆவணம் இல்லை என 5 பேரையும் விடுவித்ததை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.