அபராத தொகை செலுத்தி, இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 20 பேர், ராமேஸ்வரம் திரும்பினர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 29ஆம் தேதி, டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இவர்களுக்கு, ஆகஸ்ட் 19ஆம் தேதி, மன்னார் நீதிமன்றம், இந்திய மதிப்பில், தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மீனவர்கள் 9 பேரும், இதற்கு முன் சிறை பிடிக்கப்பட்ட 11 ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களும் அபராத தொகையை செலுத்தி இரண்டு வாரத்திற்கு முன்பே விடுதலையாகினர். இவர்கள் அனைவரும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று செவ்வாய்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை தனி வாகனம் மூலம், இன்று மாலை பாம்பன் அழைத்து வந்தனர். விடுதலையான மீனவர் டெரிக் கூறியதாவது: நாங்கள் கைதாகி சிறைக்கு சென்று 80 நாட்கள் ஆகியுள்ளது. எங்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை சிறையில் எங்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை, ஒழுங்கான சாப்பாடும் வழங்கவில்லை. குறைகளை இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தால், நீங்கள் அடிக்கடி இப்படி தொந்தரவு செய்தால் தாமதமாக தாயகம் செல்வீர்கள் என திட்டினர். அபராத தொகையை செலுத்திய பின்னும் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். மற்ற ஏழு மீனவர்களுக்கு அபராத தொகை செலுத்தவில்லை என மொட்டை அடித்தனர். வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் அபராத தொகையை செலுத்தி விடுதலை ஆனோம். இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவியை செய்வதில் மிகவும் மோசம்.இவ்வாறு மீனவர் டெரிக் வேதனை தெரிவித்தார்.