திண்டுக்கல் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 3000க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, அரை கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள மீன்களை பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், கோம்பையன்பட்டி பகுதியில் உள்ள அணைகுளம், சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் கடந்த வருடம் பெய்த மழையின் காரணமாக, முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து, ஊர் பொதுமக்கள் சார்பில், கடந்த வருடம் குளத்தில் மீன்கள் வாங்கி விடப்பட்டது. தற்போது, குளத்தில் நீர் வற்றிய நிலையில், ஊர் பொதுமக்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று காலை கோம்பையான்பட்டி பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று விநாயகர் கோயிலில் வழிபட்ட பொதுமக்கள், குளக்கரையில் அமைந்திருக்கும் கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பிரசாதம் வழங்கினர். இதனை அடுத்து மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் வலை, ஊத்தா, கட்லா, ரோகு, விரால், ஜிலேபி போன்ற மீன்கள் பிடிபட்டன. 30 கிராமங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பங்களுடன் குளத்தில் இறங்கி ஆர்வமுடன் மீன் பிடித்துச் சென்றனர்.