பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தில், நூல் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, இயந்திரம், நூல்கள் எரிந்து சேதமாயின. பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம், பகுதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் இன்று, தொழிலாளர்கள், இயந்திரத்தில் நூல் நூற்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்குள்ள மோட்டாரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, தீ மள மளவென பரவி, நூல் நூற்பு இயந்திரத்தில் உள்ள பஞ்சு மற்றும் அனைத்து பகுதியிலும் தீ பரவியது. அங்கிருந்த தொழிலாளர் அணைக்க முயன்றும் தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் வெளியேறினார்கள். இயந்திரத்தில் உள்ள நூலில் பிடித்த தீ, நூல் மற்றும் இயந்திரங்களிலும் பரவியது. இந்த தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் நூல்கள், பஞ்சுகள் எரிந்து சேதமாயின. தீ விபத்து காரணமாக நூல் மில்லின் மேற்கூரை சிமெண்ட் சீட்டுகள் உடைந்து உள்ளே விழுந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.