கவின் ஆணவ படுகொலை தொடர்பான வழக்கில், சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், முதல் குற்றவாளியான சுர்ஜித், ஆவணங்களை மறைப்பதற்கு, அவரது தாய் கிருஷ்ண குமாரி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் மீதும் குற்றம் சாட்டி, இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின், காதல் விவகாரத்தில் நெல்லையில் வைத்து, அவர் காதலித்த பெண்ணின் சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, 37 ஆவணங்களை சேகரித்து, 69 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், டிஜிபி உத்தரவுபடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், இறுதி அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.