திருவள்ளூர் அருகே, வேறு சாதி இளைஞரை காதலித்து வந்த பெண் VAO விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தனது காதலிக்கு வலுக்கட்டாயமாக பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்து விட்டதாக காதலன் போலீஸில் புகார் அளித்திருப்பது திடுக்கிட வைத்துள்ளது. காதலுக்காக கடைசி வரைக்கும் போராடிய பெண் VAO, மரணத்திற்கு முன்பாக அழுது கொண்டே காதலனிடம் பேசிய அதிர்ச்சி ஆடியோ இருந்தும் கூட, பெண் VAO-வின் குடும்பத்திற்கு போலீஸ் உடந்தையாக செயல்படுவதாக பகீர் புகாரும் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த ரவி - ஜோதி தம்பதியின் மகள் அருணா, கீரப்பாக்கம் VAO ஆக இருந்து வந்தார். அருணாவுக்கும், பக்கத்து கிராமமான திருப்பாலைவனம் VAO ஆக பணிபுரிந்து வந்த திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த சிவபாரதி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது. முதலில் சோஷியல் மீடியாவில் பார்த்து நண்பர்களாக பழகிய இருவருக்கும் மனதுக்கு நெருக்கமாக பிடித்து போகவே, காதலித்து வந்ததோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. தங்களது காதல் கதையை இருவரது வீட்டிலும் சொல்ல, சிவபாரதி வீட்டில் ஒப்புக் கொள்ள, வெவ்வேறு சாதி என்பதை காரணம் காட்டி அருணாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அருணாவின் அண்ணன் அரவிந்த், ஆவடியில் ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வரும் நிலையில், மொத்த குடும்பமே அருணாவின் காதலுக்கு எதிராக நின்றிருக்கிறது. குடும்பமே சேர்ந்து அருணாவை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இன்னும் கொடூரமாக அருணாவின் அண்ணனான அரவிந்த், சிவபாரதியை திருமணம் செய்ய நினைத்தால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்ட என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்திருக்கிறார் காதலி அருணா.இப்படி, காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி, குடும்பத்தில் பிரச்சனை நிலவிய சமயத்தில் தான், அருணாவின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தரப்பில் கூறும் நிலையில், மருந்தை ஊற்றி கொலை செய்து விட்டதாக காதலன் சிவபாரதி புகார் கொடுத்திருப்பது அதிர வைத்துள்ளது. கடந்த 29ஆம் தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில், அருணாவை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, நிலம் அளக்கும் போது பாம்பு தீண்டி விட்டதாக குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள். பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அருணா, புத்தாண்டு காலையில் உயிரிழந்தார். அருணா இறந்த பின்னர் திருப்பாலைவனம் போலீஸில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரில், வீட்டு வேலை செய்யாததால் தாய் திட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.முதலில் மருத்துவமனையில் சேர்க்கும் போது பாம்பு மீது பழி போட்ட குடும்பத்தினர், போலீஸ் புகாரில் முன்னுக்குப் பின் முரணாக கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், தனது காதலி அருணாவுக்கு வலுக்கட்டாயமாக பூச்சி மருந்தை வாயில் ஊற்றி விட்டு கொலை செய்து விட்டதாக காதலன் சிவபாரதி திருப்பாலைவனம் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணா, தனது தந்தையின் செல்போனில் இன்ஸ்டாகிராம் LOG IN செய்து காதலன் சிவபாரதியிடம் பேசியிருக்கிறார். அப்போது, 4 பேரும் சேர்ந்து கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டார்கள் என குடும்பத்தினரை குறிப்பிடும் அருணா, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி விட்டார்கள் என கூறியிருக்கும் குறுஞ் செய்தியும் வெளியாகி உள்ளது. இதுமட்டுமல்லாமல், போலீஸ்கார அண்ணன் அரவிந்தும், தம்பி அஜித்தும் சேர்ந்து கொடுமைப்படுத்தி செல்போனை உடைத்து பறித்துக் கொண்ட விபரத்தை காதலன் சிவபாரதியிடம் அருணா கூறிய குறுஞ்செய்தியும் அதில் இடம் பெற்றுள்ளது.இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் கூட, மர்மமான மரண வழக்கை விசாரிக்காமல் திருப்பாலைவனம் போலீஸ் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இறந்து போன அருணாவின் அண்ணன் அரவிந்த் போலீஸ் என்பதால், வழக்கை திசை திருப்ப முயற்சித்து வருவதாக பகீர் கிளப்பப்படுகிறது. அதோடு, அருணாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமலேயே மருத்துவமனையில் இருந்து வாங்கிச் சென்றதாக புகாரும் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட VAO கண் கலங்கி நிற்கதியாக போலீசில் புகார் அளித்து விட்டுச் சென்றிருக்கும் நிலையில், முறையாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய போலீஸ், ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. ஆகையால், அருணாவுக்கு நடந்தது என்ன என்று விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.காதலன் சிவபாரதி பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என எத்தனையோ முறை அழைத்தும் கூட, பெற்றோர் சம்மதத்தை எப்படியாவது வாங்கி விடுகிறேன் என நம்பிக்கையாக இருந்த அருணாவின் மரணத்திற்கு, யார் காரணம் என்பதை போலீஸ் தான் கண்டுபிடிக்க வேண்டும்.