தஞ்சை அருகே திருமண நிச்சயதார்த்தமான ஐந்தே நாட்களில் அரசுப்பள்ளி தற்காலிக ஆசிரியையை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்துவிட்டு பத்தே நிமிடத்தில் வேறொரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட காதலி தயாரான ஆத்திரத்தில் கொலை செய்த காதலன் நிதானமாக நடந்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே பிராந்தை கொத்தட்டை ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் 26 வயதான காவியா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியமூர்த்தியின் மகளான காவியா, ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல காலையில் காவியா ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோயில் ராமகிருஷ்ணன் மடம் பகுதியில் ஸ்கூட்டியை வழிமறித்த ஒரு இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் பலமுறை சரமாரியாக குத்தினார். ஆட்களின் நடமாட்டம் இருந்தும் அதனை பொருட்படுத்தாத இளைஞர், இளம்பெண்ணை கத்தியால் குத்த அதனை பார்த்து பொதுமக்களும் அருகில் செல்ல முடியாமல் அஞ்சி நடுங்கினர்.தலைப்பகுதியில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே காவியா உயிரிழந்த நிலையில், நேராக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார் இளைஞர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை இளைஞர் கொன்றதற்கான காரணம் தெரியவந்தது.மேலகளக்குடி பகுதியை சேர்ந்தவர் 29 வயதான இளைஞர் அஜித்குமார். பெயிண்டரான இவர் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். எம்எட் படித்துள்ள காவியாவும், அஜித்குமாரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவியாவுக்கும் அவரது முறைப் பையனுக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவெடுத்துள்ளனர்.வருங்கால மாமனார் ஓய்வு பெற்ற ஆடிட்டர் என்பதால் வசதிவாய்ப்பில் குறைவில்லை என்பதாலும், வருங்கால மாப்பிள்ளை சென்னையில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்ப்பதாலும் காவியாவின் உறவினர்கள் இளம்பெண்ணை திருமணத்திற்கு சம்மதிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.அஜித்குமார் படிப்பிலும், வேலையிலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதால் காதலை காவியாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இல்லை என தெரிகிறது. இதனால், முறைப் பையனுக்கு கழுத்தை நீட்ட காவியா சம்மதித்ததும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.நிச்சயதார்த்தம் நடந்து கடந்த 4 நாட்களாகியும் அதனை சொல்லாமலேயே அஜித்குமாருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார் காவியா. 5ஆவது நாள் இரவு 8 மணியளவில் செல்போனில் அஜித்குமாருடன் பேசிக்கொண்டிருந்தபோது தான் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்று பீடிகை போட்டதோடு வாட்ஸ்அப்பில் சில போட்டோக்களையும் அனுப்பி உள்ளார்.காவியா வேறொரு இளைஞருடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், பள்ளிப்பருவத்தில் இருந்தே உருகி உருகி நாம் காதலித்து கொண்டிருக்கும்போது வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தால் என்ன அர்த்தம்? வசதிவாய்ப்பை பார்த்ததும் கழற்றிவிடுவதா என காதலியிடம் நியாயம் கேட்டுள்ளார்.அதற்கு, நம் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை, தனக்கு வேறு வழி தெரியவில்லையென்றும், அவர்களை மீறி நாம் திருமணம் செய்து கொண்டால் காலம் முழுக்க தன்னை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக கூறி உள்ளார் காவியா. அதைக்கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அஜித்குமார் காதலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.அந்த திட்டப்படி, காலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காதலியை வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த காவியா சிலநொடிகளிலேயே உயிரிழந்தார். காதலி உயிரிழந்ததும் நிதானமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்று சரணடைந்துள்ளார் அஜித்குமார். பட்டப்பகலில் இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.