மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே பத்தாண்டுகளுக்கு முன் ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவான நபரின் தாயார், பொங்கல் பரிசுத்தொகை வாங்க காரில் வந்த போது ஊர்மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து செய்தித் தொகுப்பை விரிவாக காணலாம்.ஏழை மக்கள் அடகு வைத்த நகையையும், மாத மாதம் கட்டிய தொகையையும் சுருட்டிக் கொண்டு பத்தாண்டுகளாக பதுசாய் பதுங்கி விட்டு, பொங்கல் பணத்துக்காக பகுமானமாய் காரில் வந்திறங்கிய பாட்டியை, இரவோடு இரவாக ரௌண்டு கட்டிய ஊர் மக்கள் போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் உள்ளூரிலேயே சுந்தரபாண்டியன் & கோ என்ற பெயரில் நகை அடகு கடை மற்றும் ஏலச் சீட்டு நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரை சேர்ந்த பலரும் ஆத்திர அவசரத்திற்காக சொற்ப தொகைக்காக தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி வந்ததாக தெரிகிறது. இதில் பலரும் அசல் தொகையை கட்டிவிட்டு நகை கேட்டு வந்த நிலையில், பத்தாண்டுகளுக்கு முன்னர் நகையை தருவதாக கூறிவிட்டு இரவோடு இரவாக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. மக்கள் தன்னிடம் அடகு வைத்த நகைகள் பாதியை தனது தாயார் ஜானகி அம்மாளின் பெயரில் வங்கியில் அடமானம் வைத்துவிட்டு சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏறக்குறைய முன்னூறு சவரன் நகைகளும் பல லட்சம் ரூபாய் பணத்தையும் ஜீவானந்தம் ஏப்பம் விட்டதாக உள்ளூர் மக்கள் குமுறுகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகை 3000 ரூபாயை வாங்க ஜீவானந்தத்தின் தயார் ஜானகி சொகுசு காரில் வந்திறங்கியதாக தெரிகிறது.ஜானகி வந்திருப்பதை அறிந்த இரும்பாடி மக்கள், இரவோடு இரவாக சென்று அவர் காரை சுற்றி வளைத்து சிறைபிடித்ததாக தெரிகிறது. நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்த மக்கள் ஜானகியின் காரை சூழ்ந்துகொண்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் அங்கு விரைந்த போலீசார், காரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜீவானந்தத்தின் மோசடி பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னரே போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டவே, போலீசார் மீண்டும் புகாரளித்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.இறுதியாக போலீசாரின் கோரிக்கையை ஏற்ற மக்கள், ஜானகி அம்மாளை காவல்நிலையம் அழைத்துச் செல்ல சம்மதித்தனர். போலீசுடன் பாதிக்கப்பட்ட மக்களும் தாங்கள் அடகு வைத்த நகைகளின் விவரம் அடங்கிய சீட்டுடன் காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.நகைகளையும் பணத்தையும் ஏமாற்றிய ஜீவானந்தத்தின் குடும்பம், நஷ்டத்தை சந்திக்கவில்லை என்றும் அவருக்கு மூன்று வீடுகள் சொந்தமாக தோப்பு உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் அதனை விற்று தங்களுக்கு சேரவேண்டிய நகைகளை ஒப்படைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பத்தாண்டுகளாக பதுங்கியிருந்த மோசடி குடும்பம் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணில் சிக்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு உரிய நீதியை போலீசார் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. நியூஸ்தமிழ் செய்திகளுக்காக வாடிப்பட்டி செய்தியாளர் குமார். இதையும் பாருங்கள் - சிதறி கிடந்த வளையலால் முடிந்த வழக்கு