புதியதாக கட்சி தொடங்குபவர்கள், அதிமுக தலைவர்கள் பெயரை சொல்லித்தான் கட்சி தொடங்க முடியும் என்றும், யார் வந்தாலும் எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் இபிஎஸ் பேசியுள்ளார். காஞ்சிபுரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது:அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கின்றனர். பாவம், அறியாமையின் காரணமாக பேசுவதாக நான் பார்க்கிறேன். இது கூடத் தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்று சொன்னால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? சிந்தித்து பாருங்கள். இன்றைக்கு நாட்டிலே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சில பேர், சில கருத்துக்களை தன் இஷ்டம் போல் பேசி வருகிறார்கள். ஆனால், அதிமுக அப்படி இல்லை. நம்முடைய தலைவர்கள் தோற்றுவித்த கட்சி. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக ஏற்றம் பெற்ற கட்சி. ஒரு மரம் எடுத்தவுடனே பலன் தருவதில்லை. முதலிலே செடியை நடுவோம். அதற்கு நீர் ஊற்ற வேண்டும், பராமரிக்க வேண்டும். எரு இட வேண்டும், அது மெல்ல மெல்ல பெரியதாகி மரமாகி, பிறகு அந்த மரம் பூ பூத்து காய் காய்த்து கனி கொடுக்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும்... எடுத்தவுடனேயே எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது. திரைப்படத்தில் ஓய்வு பெறும் காலத்தில் புதியதாக கட்சி தொடங்கியவர்கள், பெரிதாக ஏதோ சாதித்தது போல பேசுகிறார்கள். ஏதோ, இவர்கள் வந்து தான் நாட்டை காப்பாற்றப் போவது போல பேசுகின்றனர். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.