நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாடு, ஆடுகளை வன விலங்குகள் வேட்டையாடுகின்றன. யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. மனிதர்களையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், தேவர் சோலை பகுதியில் பட்டப்பகலில் புலி ஒன்று வளர்ப்பு மாட்டை வேட்டையாடிக் கொன்றது. பின்னர், மனிதர்களின் சத்தத்தைக் கேட்டு புலி ஓடியது. புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில், கூண்டில் சிக்காத புலி, மீண்டும் பசுமாட்டை வேட்டையாடியது. பாலம் வயல் பகுதியில் 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி கொன்றது. இதனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, வனத்துறையினர் புலி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.