தர்மபுரி, காரிமங்கலம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று, தமிழக வெற்றி கழகம் சார்பாக வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தர்மபுரி மாவட்டத்தில், சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தர்மபுரி சட்டமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றினார். இன்று பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிகளில் மக்களை சந்தித்து பேச உள்ளார். இதனால், பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் அதிமுகவினர், சாலையின் இரு புறமும், பிரம்மாண்ட பேனர்கள் அமைத்துள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி.செல்வம் என்பவர் தனது புகைப்படத்துடன் பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, ’முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களே வருக வருக’ என வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார். பேனரின் ஒரு முனையில் விஜய் தலையில் பச்சைத் துண்டுடன் கை கூப்பி வணங்குவது போலவும், மறுமுனையில் இபிஎஸ் பச்சைத்துண்டுடன் வணங்குவது போலவும் பேனர் கட்டி உள்ளனர். அரூர் பகுதியில் இபிஎஸ் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளை கட்சியினர் அசைத்து வரவேற்பு அளித்த நிலையில், இந்த பேனர் பேசு பொருளாகி உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை இபிஎஸ் தெரிவித்து வருவதால் விஜய் கட்சியினர், அவரை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது,