தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவித்த மாணவர்களை திமுக எம்.எல்.ஏ சண்முகையா மாற்றுப் பாதையில் வேன் மூலம் அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். செக்காரக்குடி ஊராட்சியின் தெற்கு பகுதியிலுள்ள 2 ஓடைகளிலும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை மதியம் கொட்டித்தீர்த்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இணைப்பு சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் செக்காரக்குடி அரசு பள்ளியில் பயிலும், மகிழம்புரம், தளவாய்புரம், கள்ளன்பரும்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.