சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சமடைந்துள்ளனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில், பெண்கள், இளைஞர்கள் என நாள்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி விளையாடுவதும் வழக்கம். இந்நிலையில் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள், அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொள்வோரை அச்சுறுத்தி வருகின்றன. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.