சேலத்தில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, ஓசியில் பாத்திரம் கேட்டு டார்ச்சர் கொடுத்த திமுக பெண் கவுன்சிலரின் கணவர், ஆட்களுடன் வந்து கடையில் பொருட்களை வெளியில் தூக்கி வீசி அராஜகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. சகோதரனுக்காக அரசு நிலத்தை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்த பெண் கவுன்சிலர், பாத்திரக் கடைக்காரரை பாடாய்படுத்தி வைக்கும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.சேலம் மாநகராட்சியின் 30ஆவது வார்டு திமுக கவுன்சிலர் அம்சா, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனது சகோதரருக்காக வெறும் 5 ஆயிரத்திற்கு குத்தகைக்கு எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. 5 ஆயிரத்திற்கு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் 3 கடை போட்ட கவுன்சிலரின் சகோதரர் பாலன், ஒரு கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் என மாத வாடகை வசூலித்து செழிப்பாக இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், ஒரு கடையை கிருபாகரன் என்பவர் தனது பாத்திரக் கடையின் குடோனாக பயன்படுத்தி வந்திருக்கிறார். சுமார் 2 வருடங்களாக குடோன் செயல்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக நலத்திட்ட உதவிகள் கொடுக்க வேண்டும் எனக் கூறி திமுக கவுன்சிலர் அம்சாவின் கணவர் ரமேஷ், ஓசியிலேயே பாத்திரம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. வாங்கும் பாத்திரத்திற்கு காசு கொடுக்காமல் இருக்கவே, கடை சியாக ஒரு முறை கவுன்சிலரின் கணவர் வந்து பாத்திரம் கேட்ட போது பாத்திர கடைக்காரர் கொடுக்க முடியாது என மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.இதனால், டென்ஷன் ஆன கவுன்சிலர் தரப்பு, சகோதரன் பாலன் மூலம் பாத்திரக்கடை குடோனுக்கு வாடகை தொகையை உயர்த்தி கேட்டிருக்கிறது. ஆனால், வாடகையை உயர்த்தி கொடுக்க மறுத்த உரிமையாளர் கிருபாகரன், கடையை காலி செய்து கொள்வதாக கூறி அட்வான்ஸ் தொகை 2 லட்சம் ரூபாயை திருப்பி தர சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால், அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்காமல், கடையை காலி செய்ய சொல்லி கவுன்சிலர் அம்சா தரப்பு வற்புறுத்திக் கொண்டே இருக்க, கிருபாகரன் நீதிமன்றத்தை நாடியதாக கூறப்படுகிறது. இதிலிருந்து தான் இரு தரப்புக்கும் பிரச்சனை வெடித்திருக்கிறது. அட்வான்ஸ் தொகையை கொடுக்காமல் கடையை காலி செய்ய முடியாது என கிருபாகரன் விடாப்பிடியாக இருக்க, ஆட்களுடன் வந்து குடோனில் இறங்கியிருக்கிறது கவுன்சிலர் தரப்பு. கிருபாகரன் இல்லாத நேரம் பார்த்து குடோனுக்கு வந்து சாக்கு மூட்டையில் கட்டியிருந்த பொருட்களை அள்ளி வெளியில் வீசி அராஜகம் செய்திருக்கிறது. தடுக்க வந்த பாத்திரக் கடையின் பெண் ஊழியர் கீர்த்தனா மீதும் தாக்குதல் நடத்தி கையை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கிருபாகரனை தகாத வார்த்தையில் பேசி, கவுன்சிலர் வீட்டு பெண்களும் சீறி அடிக்க பாய்ந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இவ்வளவு, களேபரத்திற்கு மத்தியிலும் கவுன்சிலர் அம்சா வீடியோகிராஃபர் போல வீடியோ எடுத்துக் கொண்டே இருந்தார். தகவல் அறிந்து போலீசும் செய்தியாளர்களும் சம்பவ இடத்திற்கு செல்ல, அதற்குள் கவுன்சிலரும், அவரது கணவரும் ஸ்பாட்டில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாத்திரக்கடை உரிமையாளர் கிருபாகரன் அளித்த புகார் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அதோடு, கடைசி நான்கு மாதமாக கிருபாகரன் வாடகை கொடுக்கவில்லை என்பதால் தான் கடையை காலி செய்ய சொன்னதாக கவுன்சிலர் அம்சா தரப்பு கூறினாலும், ஓசியில் பாத்திரம் கேட்டு டார்ச்சர் செய்ததால் தான் வாடகை கொடுக்காமல் இருந்ததாகவும், அப்போதும் கூட அட்வான்ஸில் கழித்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை கேட்டதற்கு தான் அடித்து அராஜகம் செய்ததாகவும் கிருபாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.