தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில், எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுச்சந்தைகள் புகழ் பெற்றவையாகும். இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் கூட வியாபாரிகள் வருவது வழக்கம். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. மாடு, கோழி, மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடக்கிறது. தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளோடு சந்தையில் குவிந்தனர். தீபாவளியன்று, ஆட்டுக்கறி விற்பனை அதிகம் இருக்கும் என்பதால், வாட்டசாட்டமான ஆடுகள் ரூ.15 ஆயிரம் தொடங்கி ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.