தீபாவளி மற்றும் பீகார் தேர்தலுக்காக, திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான தொழிலாளர்கள் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது. பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகை மற்றும் அடுத்த மாத துவக்கத்தில் வர உள்ள பீகார் தேர்தலுக்காக சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் குவிந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் வரை செல்லும் டாடா நகர் ரயிலில் செல்வதற்காக குவிந்தனர். அனைத்து பயணிகளையும் முறையாக சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். ரயில் வந்த உடன் வட மாநில தொழிலாளர்கள் முண்டி அடித்துக் கொண்டு ஏறினர்.