தீபாவளியை முன்னிட்டு, மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. மதுரை மத்திய சிறைச்சாலை வாயிலில், ஃப்ரீடம் பஜார் என்ற கடை கடந்த சில வருடங்களாக பொது மக்கள் மற்றும் சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு வசதியாக உணவு, உடை, இனிப்பு, கார வகைகள் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், மதுரை சிறையில் இருக்கக்கூடிய சுமார் 2000 சிறைவாசிகள் மற்றும் விசாரணை கைதிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது மறுவாழ்வு பணிகளை, மேம்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு சிறைத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு மதுரை மத்திய சிறைவாசிகள் லட்டு, ஜாங்கிரி, அல்வா, பாதுஷா, மைசூர் பாகு போன்ற இனிப்பு வகைகளும், மிச்சர், காராச்சேவு, காராபூந்தி உள்ளிட்ட கார வகைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைச் சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மதுரை மத்திய சிறைச்சாலையில் தயார் செய்யப்படக்கூடிய இனிப்பு வகைகள் மிகவும் சுவையானதாக இருப்பதால் மக்கள் தொடர்ந்து ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.