விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 1500 வீரர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், 49ஆவது ஜூனியர் தடகள போட்டி இன்று காலை தொடங்கியது. மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 மீட்டர், 200 மீட்டர், ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் என மொத்தம் 104 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன. மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைக்கு வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழை காலத்தில், விளையாட்டு போட்டி நடத்தவோ, பயிற்சி பெறவோ முடியாத நிலை இருப்பதால், சிந்தடிக் மைதானம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.