திருவாரூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் பத்தாயிரம் மெட்ரிக் டன் நெல், வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படாததால், நெல் மூட்டைகள் தேக்கமடைந்து கொள்முதல் நடக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தற்போது அரவைக்காக நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ரயில், லாரிகள் மூலமாக நெல் மூட்டைகள் அனுப்பப்படும் நிலையில், அதனை ஆய்வு செய்த ஆட்சியர் மோகன சந்திரன், தடையின்றி நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில், 368 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று ரயில்கள் மூலமாக வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் இந்த தகவலை தெரிவித்தார்.