73 வயது முதியவருக்கு வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ், அடுத்த சில நொடியில் வந்த செல்போன் அழைப்பு, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக முதியவரை மிரட்டி 4.15 கோடியை சுருட்டிய 23 வயது இளைஞர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சென்னையில் உள்ள முதியவரை ஏமாற்றியது எப்படி? இளைஞர் கைது செய்யப்பட்டாரா? பின்னணி என்ன?73 வயசாகும் முதியவர் ஸ்ரீவத்சன், ஒரு பிரைவேட் கம்பெனியில நல்ல பொறுப்புல வேலை பாத்துட்டு ரிட்டயர்ட் ஆகிட்டாரு. கை நிறைய சம்பளம் வாங்குன அந்த முதியவருக்கு சொத்தும், பேங்க் பேலன்சும் அதிகமா இருந்துருக்குது. அதனால, சென்னை மயிலாப்பூர்ல பிள்ளைகள், பேரன், பேத்திகளோட சந்தோஷமா வாழ்க்கையை கழிச்சிட்டு இருந்துருக்காரு. ஆனா, பேங்க் பேலன்சுக்கு பெரிய ஆபத்து காத்துட்டு இருக்குறது அந்த முதியவருக்கு தெரியாமபோச்சு. செப்டம்பர் 26ஆம் தேதி, முதியவரோட செல்போன் வாட்ஸ்அப்ல ஒரு மெசேஜ் வந்துருக்குது.. அந்த மெசேஜ்ல உங்க சிம் கார்டு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ருக்குறதாகவும், மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு பண்ணிருக்குறதாகவும், கூடிய சீக்கிரமே கைது செய்யப் போறாங்கனும் இருந்துருக்குது. அத பாத்து ஷாக்கான முதியவர் என்ன செய்றதுனு தெரியாம யோசிச்சிருக்காரு. அந்த யோசனைக்கு மத்தியில ஒரு கால் வந்துருக்குது. அந்த கால்தான் முதியவரோட பேங்க் பேலன்ஸை வாஷ்அவுட் பண்ண வந்த கால்.மும்பை சைபர் கிரைம்ல இருந்து உயர் அதிகாரி பேசுறதா எதிர்முனையில இருந்து ஒரு ஆண்குரல் கேட்டுருக்குது. ஏற்கனவே மெசேஜை பார்த்து அரண்டுபோன முதியவர் போன்ல மர்மநபர் பேசுன வாய்ஸை கேட்டு மேலும் மிரண்டுருக்காரு. சட்டவிரோத செயல்கள் தொடர்பா இன்டர்போல் மற்றும் உச்சநீதிமன்றம் தகவல் வெளியிட்ருக்குறதாகவும் மர்மநபர் மிரட்டிருக்காரு. முதியவரோட குரல்ல ஒருவித பதற்றத்த கண்டுபிடிச்ச எதிர்முனையில இருந்த நபர், நீங்க மும்பை சைபர் கிரைம் போலீஸ்ல நேர்ல ஆஜராகணும், இல்லனா சென்னைக்கு வந்து நாங்களே அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டு வருவோம்னு கடுமையா பேசிருக்காரு. அதோட, உங்க அக்கவுண்ட்ல எல்லா பணத்தையும் நான் சொல்ற வங்கி எண்ணுக்கு உடனே அனுப்பனும், அந்த பணத்தை ரிசர்வ வங்கி ஆய்வு பண்ணுவாங்க, அந்த ஆய்வு முடிஞ்சதும் உங்க பணம் உங்க அக்கவுண்டுக்கே திரும்ப வந்துரும்னு சொல்லிருக்காரு எதிர்முனையில இருந்த மர்ம நபர்... அந்த பேச்ச கேட்டு நடுங்குன முதியவர், தன்னோட பேங்க அக்கவுண்ட்ல இருந்த 4.15 கோடி ரூபாயை மர்மநபர் சொன்ன வங்கி கணக்குகளுக்கு செப்டம்பர் 26ஆம் தேதில இருந்து அக்டோபர் 5ஆம் தேதி வரைக்கும் பல தவணையா அனுப்பிருக்காரு. அக்கவுண்ட்ல இருந்த பணத்தை முதியவர் முழுமையா அனுப்பினதும் மர்மநபர் போனை வச்சிட்டாரு. அதுக்குப்பிறகு அந்த செல்போன் எண்ல இருந்து அழைப்போ, வாட்ஸ்அப் மெசேஜோ எதுவுமே வரல. அதனால, மும்பை சைபர் கிரைமுக்கு போன் பண்ணி நடந்த விவரத்தக்கூறி பணத்த கேட்ருக்காரு முதியவர். அதக்கேட்டு அதிர்ச்சியான மும்பை சைபர் கிரைம் போலீசார், எங்க தரப்புல இருந்து உங்ககிட்ட யாருமே பேசல, பணமும் கேக்கல, அதனால, உடனே போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுங்கனு சொல்லிருக்காங்க.. அதுக்குப் பிறகு தான் தான் ஏமாந்த விஷயமே முதியவருக்கு தெரிஞ்சிருக்குது.. அதுக்குப்பிறகு கண்ணீர் வடிச்சிக்கிட்டே சென்னை வேப்பேரியில உள்ள போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காரு முதியவர் ஸ்ரீவத்சன். அடுத்து கமிஷ்னர் அருண் உடனே விசாரிக்க உத்தரவிட்ருக்காரு. அதுக்குப்பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணையில இறங்கிருக்காங்க. முதியவர்கிட்ட பேசுன செல்போன் நம்பர் யாரு பேர்ல வாங்கப்பட்ருக்குது, அதோட முகவரி எல்லாத்தையும் செக் பண்ணிருக்காங்க. அதுல, உத்திர பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம் மௌரானிப்பூர்ல இருந்து மனிஷ்குமாங்குற நபர், முதியவர்கிட்ட பேசுனது தெரிஞ்சிருக்குது. அடுத்து சென்னையில இருந்து உத்திரபிரதேசத்துக்கு போன சென்னை சைபர் கிரைம் போலீசார், அந்த மாநில போலீசார் உதவியோட, இளைஞர் மனிஷ்குமாரை கைது பண்ணி, ட்ரான்சிட் வாரண்ட் மூலமா சென்னைக்கு அழைச்சிட்டு வந்துருக்காங்க.அதுக்குப்பிறகு, மனிஷ்குமார்கிட்ட நடத்துன விசாரணையில ஏமாந்தது முதியவர் ஸ்ரீவத்சன் மட்டுமில்ல, பல முதியவர்கள் ஏமாந்துருக்காங்கனு தெரியவந்துச்சு. அதேமாதிரி, ஆன்லைன் மூலமா வேலை வாங்கி தர்றதாகவும் மோசடியில ஈடுபட்டுருக்குறாரு மனிஷ்குமார். டிஜிட்டல் அரெஸ்ட் செஞ்சிருக்குறதா பல முதியவர்களை குறிவச்சு பணத்த மோசடி பண்றது தான் மனிஷ்குமாரோட ஸ்பெஷல் டெக்னிக். அப்படி ஏமாந்த பல முதியவர்கள் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணாம இருந்துருக்காங்க. அப்படிதான் ஸ்ரீவத்சனும் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண மாட்டாருனு, ரூ.4.15 கோடியை அமுக்கிருக்காரு மனிஷ்குமார். ஆனா, முதியவர் கம்ப்ளைண்ட் பண்ணதால மனிஷ்குமார் சிக்கிட்டாரு. இதேமாதிரி, இந்த மோசடிக்கு பின்னால மனிஷ்குமார் மட்டுமில்ல இன்னும் நாலு பேரு இருக்குறதா இளைஞரே வாக்குமூலம் குடுத்துருக்காரு. நேக்கா ஏமாத்தி பறிக்கிற பணத்த ஆளுக்கு 25 சதவீதம்னு பிரிச்சி எடுத்துக்குறதுதான் இந்த கூட்டத்தோட வழக்கமாம். மனிஷ்குமார்கிட்ட இருந்து ரெண்டு செல்போன்கள், 7 வங்கி புத்தகங்களை பறிமுதல் செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்துல ஆஜர்படுத்தி சிறையில அடைச்ச போலீசார், மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரையும் தேடிட்டு இருக்காங்க.