உத்திரமேரூர் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாரி எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு, 28ஆம் ஆண்டு நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. துர்க்கை அம்மனுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்தல் விழா கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்து பிள்ளையார் ஆலயத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி, ஒரே நிற ஆடை அணிந்து கொண்டு, முளைப்பாரியை தலையில் சுமந்தபடி பம்பை, உடுக்கை, நாதஸ்வர, மேள, தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் தொடங்கியது. பஜார் வீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, துர்க்கை அம்மன் ஆலயம் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, மாங்கல்ய பாக்கியம் வேண்டி திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.