108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத 4ஆவது சனிக்கிழமையை ஒட்டி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து, ஆராதனைகள் செய்து, நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் வணங்கி வழிபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்திவரதர் தூயில் கொள்ளும் அனந்த சரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.