சிறுவாபுரி முருகன் கோயிலில், ஆவணி மாத செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக, பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமையான இன்று, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வீடு கட்ட, திருமண தடை நீங்க, அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக, ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.