திருச்சி மாவட்டம் லால்குடியில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த மோகன், தனது தந்தை வாங்கிய நிலத்தின் பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என இருப்பதை அறிந்து, பெயர் திருத்தம் செய்து தருமாறு கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தார். இந்த மனு விசாரணைக்காக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து, லால்குடி துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து மோகன் கேட்டுள்ளார். அப்போது, பெயர் திருத்தம் செய்ய ரவிக்குமார் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், கொடுக்க விரும்பாத மோகன், லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.