மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2024ஆம் ஆண்டு, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரணத் தொகை 56 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு வழங்கியதில் பல்வேறு குளறுபடி உள்ளதால் அதனை சரி செய்து விவசாயிகளுக்கு நியாயமான முறையில் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கம் மூலமாக உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்மை துறை மூலமாக வரும் மானியங்கள் அனைத்தும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் செல்லும் நிலை இருப்பதாகவும், அனைத்து விவசாயிகளுக்கும் செல்லும் வகையில், வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் விவசாயிகள் சங்கத்தினர், மாநில செயலாளர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சார் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவினை வழங்கினர்.